மத்திய அமைச்சர் தகவல் : 100 நாள் வேலை திட்டத்தில் ஏப்ரல் முதல் சம்பள உயர்வு
புதுடெல்லி : டெல்லியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் 9ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், 9ம் ஆண்டு திட்ட அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:விலைவாசி உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியம், தேசிய நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பள விகிதம் கணக்கிடப்பட்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது.
நிலத்தை சமன்படுத்துதல், ஏரிகளை தூர்வாறுதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக சிறு மற்றும் ஏழை விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.இவ்வாறு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பிரதீப் ஜெயின் பேசுகையில்,தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட விரக்தி மனநிலையும் மாறியுள்ளது. இந்த ஓர் ஆண்டில் மட்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன என்றார்.
No comments:
Post a Comment