Search This Blog

Friday, 21 February 2014

ஆங்கிலத்தில் நோட்டீஸ் வழங்கி ஏளனம் விவசாய குறை தீர் கூட்டத்தில் வேதனை புகார்

ஆங்கிலத்தில் நோட்டீஸ் வழங்கி ஏளனம் விவசாய குறை தீர் கூட்டத்தில் வேதனை புகார்

விருதுநகர்:""ஆங்கிலத்தில் நோட்டீஸ் வழங்கி, விவசாயிகளை வங்கிகள் ஏளனப்படுத்துவதாக,'' விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், புகார் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் விவாதம்:
டி. பெருமாள் (மம்சாபுரம்): மம்சாபுரம், உன்னிமலை அய்யாத்துரை,காட்டுமாடு முட்டியதில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் .
சிவகாசி (காரியாபட்டி):நிலையூர்- கம்பிக்குடி கால்வாய் திட்டம், மதுரை மாவட்டம் வரை சீரமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆனைக்குளம், மாங்குளம் வரை நீட்டிப்பு செய்து சீரமைத்தால், 15 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைவார்கள். கலெக்டர், பொதுப்பணி துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் .கலெக்டர்: முத்தரப்பு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் .
மாரியப்பன் (விஜயகரிசல்குளம்): வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதியில், ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. இவற்றில், அரசு சார்பில், மரக்கன்று நடுவதற்கும், வளர்ப்பதற்கும், அலுவலர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் .
அழகர்சாமி (திருத்தங்கல்): கடன் மற்றும் இதர விபரங்கள் தொடர்பாக, வங்கிகள், விவசாயிகளுக்கு ஆங்கிலத்தில் "நோட்டீஸ்' அனுப்புகின்றனர். இது, விவசாயிகளை ஏளனம் செய்வதாக உள்ளது. ஏன், விவசாயிக்கு ஆங்கிலம் தெரியாதா? இதை தொடர்ந்து அவர், ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசி அசத்தினார். இதை கண்ட கலெக்டர் உட்பட அதிகாரிகள் மிரண்டப்படி கவனவித்தனர்.
கலெக்டர்: வங்கிகள், தமிழில் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தப்படும்.
விஜயமுருகன் (விருதுநகர்): விவசாய பகுதியில் ரோடு வசதி இல்லாததால் ,விளைந்த பொருட்களை இருப்பிடம் கொண்டு வர ,விவசாயிகள் சிரமபடுகின்றனர். குறிப்பாக, திருத்தங்கல், அதிவீரன்பட்டியில் தரை பாலம் இல்லாதது, காரியாபட்டி அரசகுளம் பகுதி ரோடு வசதி இல்லாதது, அரசகுடும்பன்பட்டி குல்லூர் சந்தை செல்லும் ரோடு மோசமாக உள்ளதால் ,இதை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வர வேண்டும். அவர்களுக்கு பதில் கடைநிலை ஊழியர்களே வந்து செல்கின்றனர். விவசாயிகள் குறிப்பிடும் குறைகளை,இவர்கள், அதிகாரிகளிடம் எப்படி எடுத்து கூறுவார்கள் .
முத்துகிருஷ்ணன் (சுந்தரபாண்டியம்): ஸ்ரீவில்லிபுத்தூரில் பருத்தி, நெல் குறித்து பயிற்சி அளிக்க, விவசாயிகளிடம் 250 ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றனர், இதை, 50 ரூபாயாக குறைக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் தண்ணீரால், வைப்பாறு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதில், மணல் குவாரி அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலை ஏற்பட்டால், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள், ஊரை காலி செய்யும் நிலை ஏற்படும். வைப்பாறில் மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது .
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment